Singathology

Home > Other > Singathology > Page 9
Singathology Page 9

by Gwee Li Sui


  ரீட்டா: சரி, அப்பா...

  ரீட்டா விரைந்து ஓடுகிறாள்.

  அந்தோணி: ம்... இந்த இரண்டாம் உலகப்போர் இவ்வளவு விரைவில் இங்கேயும் பரவிவிடும் என்று நான் நினைக்கவே இல்லை...

  ஞானம்: எத்தனை ஆயிரம் பேர் இந்தப் போரில் மடியப்போகிறார்களோ?..

  அந்தோணி: ஆக்கம் இருந்தால் அழிவும் இருக்கத்தான் செய்யும். இப்பொழுதெல்லாம் ஆதிக்க எண்ணங்கொண்ட மனிதர்கள், ஆக்கும் இறைவனுக்கே அழிக்கும் உரிமையும் உண்டு என்று நினைப்பதில்லை. அவர்களால் ஆக்க முடியாவிட்டாலும் அழிப்பதற்குத் துடிக்கிறார்கள்.

  ஞானம்: சார்ல்ஸ் இந்நேரம் வீட்டுக்கு வந்து நம்மைத் தேடினால் என்ன செய்வது?

  அந்தோணி: அபாயச் சங்கொலி இன்னும் கேட்கிறது. அவன் எப்படி வருவான்? சரி, வா. பாதுகப்புச் சுரங்கம் வந்துவிட்டது. அபாயம் நீங்கிவிட்ட சங்கொலி கேட்டால், அவன்வீ ட்டுக்கு வந்துவிடுவான். சீக்கிரம் வா!..

  அவர்கள் விரைந்து பாதுகாப்புச் சுரங்கத்தை நோக்கிச் செல்கின்றனர்.

  காட்சி: 4

  [பின்னோட்டத் தொடர்ச்சி]

  ஜப்பானியர்கள் நாட்டைக் கைப்பற்றியதும் பல கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளையர்கள் போன்ற சில குறிப்பிட்ட இனத்தவர்கள், மற்ற இனத்தவர்களிடம் அடைக்கலம் நாடுகின்றனர். அத்தகைய வெள்ளையர் ஒருவருக்கு இரகசியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு இல்லம் திரும்புகிறார் அந்தோணி.

  அந்தோணி [கதவைத் தட்டி]: ஞானம்!.. ஞானம்!..

  ஞானம் சென்று கதவைத் திறக்கிறார்.

  ஞானம்: என்ன இவ்வளவு நேரம்?..

  அந்தோணி: நம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் மிகவும் தொடர்புடைய ஒரு வெள்ளையரைப் பற்றி உனக்கு நான் சொல்லியிருக்கிறேன் இல்லையா?

  ஞானம்: ஆமாம்... அவருக்கு என்ன?

  அந்தோணி: ஜப்பானியர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். அதனால், அவர் இரகசியமாக என்னைத் தேடி வந்து உதவி செய்யச் சொன்னார்...

  ஞானம் [திடுக்கிட்டு]: உதவியா?

  அந்தோணி: அவர் எப்படியாவது ஜப்பானியர்கள் கண்களில் படாமல் தப்பிச்செல்ல விரும்புகிறார். அந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன் எங்கேயாவது சில நாள் மறைந்திருக்க உதவும்படி கேட்டார்... அவருக்கு அந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வரத்தான் நேரமாகிவிட்டது...

  ஞானம் [அச்சத்துடன்]: திடீரென்று இப்படிச்செய்துவிட்டு வந்திருக்கிறீர்களே, இதனால் நமக்கு வரும் ஆபத்தை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா?

  அந்தோணி: ஆபத்து வரும் என்பதற்காக மனிதத்தன்மையை இழக்கச் சொல்கிறாயா? நல்லது செய்யும் நமக்கு எப்போதும் கர்த்தர் துணை இருப்பார். நீ பயப்படாதே!..

  ரீட்டா: அப்பா… ஜப்பானியர்களுக்கு வேண்டாதவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் நம்மைக் கொன்றுவிட மாட்டார்களா?

  அந்தோணி: அடைக்கலம் கொடுப்பதில் அபாயம் இருக்கிறது என்பதை அறிந்துதான் நான் அவருக்கு உதவி செய்தேன்.

  ஞானம்: அபாயம் என்று தெரிந்தும் எதற்கு ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டும்?

  அந்தோணி: ஞானம்… வியாபாரத்துறையில் அவர் எனக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இப்போது அவர் இந்த ஆபத்தான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்போது, எப்படி நான் அதைப் புறக்கணிப்பது? உதவி செய்ய மறுத்தால் அது மனிதத்தன்மையாகுமா?

  ஞானம்: மனிதத்தன்மைக்கு மதிப்புக் கொடுப்பதற்காக நம் குடும்பம் அழிந்துபோக வேண்டுமா?

  அந்தோணி: இதோ பார், ஞானம்… நாம் நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம். இதனால் ஆபத்து வரும் என்றால், அது கர்த்தர் செயல் என்று நினைத்து நம் கடமையைச் செய்வோம்!..

  ரீட்டா: அப்பா… அவரை நீங்கள் மறைத்து வைத்திருப்பது வேறு யாருக்காவது தெரிந்துவிட்டால் என்ன செய்வது?

  அந்தோணி: பாதுகாப்பான இடத்தில்தான் அவர் இருக்கிறார். அவர் இங்கிருந்து தப்பிச் செல்லும்வரை அவருக்கு நாம் இந்த உதவியைச் செய்யத்தான் வேண்டும். ம்… ரீட்டா… நீ போய் எனக்குக் குளிக்க வெந்நீர் போடு… குளித்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.

  ரீட்டா: சரி…

  ரீட்டா சமையலறையை நோக்கிச�
�� செல்கிறாள்.

  அந்தோணி: ம்… ஞானம்… ரீட்டா இருந்ததால், நான் அதை உன்னிடம் சொல்லவில்லை…

  ஞானம்: எதை?

  அந்தோணி: உனக்கு அந்த டேவிட்டை நினைவிருக்கிறதா?

  ஞானம்: எந்த டேவிட்?

  அந்தோணி: அவன்தான்! ஒரு முறை நம் ரீட்டாவிடம் முறைதவறி நடக்க நினைத்தானே! அவனைத்தான் சொல்கிறேன்…

  ஞானம்: அவனுக்கென்ன?

  அந்தோணி: இப்போது அவன் ஜப்பானியர்களுக்கு உளவாளியாக இருக்கிறான் என்று கேள்விப்படுகிறேன்… அவனால் என் வெள்ளைக்கார நண்பருக்கு ஆபத்து வந்தாலும் வரலாம் என்று நினைக்கிறேன்…

  ஞானம்: நீங்கள்தான் அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்று சொன்னீர்களே!

  அந்தோணி: ஆமாம்!.. இருந்தாலும் அவனைப்போலத் துரோக எண்ணம் கொண்டவர்களுக்கு அவர் மறைவிடத்தை அறிந்துகொள்வதில் அவ்வளவு சிரமம் இருக்காது…

  ஞானம் [அஞ்சி]: அவர் இருக்குமிடம் அவனுக்குத் தெரிந்துவிட்டால், நமக்கும் ஆபத்து வந்துவிடுமே?..

  அந்தோணி: அதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது.

  வெளியிலிருந்து கதவு தட்டப்படுகிறது.

  ஞானம் [பதற்றத்துடன்]: யாரோ கதவைத் தட்டுகிறார்களே! அந்த டேவிட் ஜப்பானியர்களை அழைத்து வந்திருக்கிறானோ?

  கதவு மீண்டும் தட்டப்படுகிறது.

  சார்ல்ஸ் [வெளியிலிருந்து]: அம்மா!..அம்மா!..

  அந்தோணி: நம் சார்ல்ஸ்தான் வந்திருக்கிறான். போய்க் கதவைத் திற…

  ஞானம் சென்று கதவைத் திறக்கிறார்.

  ஞானம்: வா, சார்ல்ஸ்… நாங்கள் யாரோ என்று பயந்துவிட்டோம்…

  அந்தோணி: என்ன இவ்வளவு நேரம்?

  சார்ல்ஸ்: கல்வியமைச்சுக்குப் போய்விட்டு ஆசிரியர் சங்கத்திற்குப் போயிருந்தேன்… அதுதான் நேரமாகிவிட்டது…

  ரீட்டா [வந்துகொண்டே]: வெந்நீர் போட்டுவிட்டேன், அப்பா… இப்போது குளிக்கப்போகிறீர்களா?

  அந்தோணி: இருக்கட்டும், ரீட்டா… கல்வியமைச்சில் என்ன சொன்னார்கள், சார்ல்ஸ்?..

  சார்ல்ஸ்: பள்ளிகள் இன்னும் இரண்டு வாரத்தில் திறக்கப்பட்டுவிடுமாம். அதனால், நான் அடுத்த வாரம் கங்கார் போகவேண்டியிருக்கும்…

  ஞானம்: அதற்குள்ளாகவா பள்ளிக்கூடங்களைத் திறக்கப் போகிறார்கள்?

  சார்ல்ஸ்: ஆமாம்மா… ஜப்பானிய மொழிப் பாடங்களும் இருக்குமாம்… அதற்குப் பாடப்புத்தகங்களும் தயாராகிவிட்டனவாம். முதலில் ‘சுத்தகானா’ சொல்லித்தர வேண்டுமாம். பிறகு ‘ஹிரகானா’வும், ‘கஞ்சிகானா’வும் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்குமாம். இவற்றை மாணவர்களுக்குச் சொல்லித்தர எங்களுக்குப் போதிய பயிற்சிகள் அளிப்பார்களாம்.

  அந்தோணி: சார்ல்ஸ்… ஆசிரியர் வேலையை நீ தொடர்ந்து செய்யத்தான் வேண்டுமா?

  சார்ல்ஸ்: ஆமாம்’பா…

  அந்தோணி: சார்ல்ஸ்… காலையில் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.

  சார்ல்ஸ்: என்ன அது?

  அந்தோணி: நீ ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு நம் வியாபாரத்தில் அக்கறை காட்டினால் என்ன?

  ஞானம்: ஆமாம்… நீ எங்களை விட்டுத் தனியே போவது எனக்கும் விருப்பமில்லை, சார்ல்ஸ்…

  அந்தோணி: நம் வியாபாரத்தை நான் தனியாகவே கவனித்துக் கொள்வது எனக்குச் சிரமமாக இருக்கிறது. நீயும் எனக்குத் துணையாக இருந்தால் எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும்… எனக்குப் பிறகு நீதானே நம் வியாபாரத்தை ஏற்று நடத்த வேண்டும்?

  சார்ல்ஸ்: அப்பா… எல்லாவற்றையும் நன்றாகச் சிந்தித்துத்தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். வியாபாரத்தில் எனக்குச் சிறிதும் நாட்டமே இல்லை. மனம் விரும்பாத தொழிலை எப்படிச் செய்வது? ஆசிரியர் தொழிலைத்தவிர வேறு எதையும் என்னால் செய்ய முடியாது அப்பா…

  அந்தோணி: ம்… சரி… பிடிக்காத தொழிலை வற்புறுத்திச் சொன்னால், உன்னால் முழு ஈடுபாட்டையும் செலுத்த முடியாது; அது வியாபாரத்திற்கும் நல்லதில்லை. உன் முடிவுப்படியே செய்…. சரி… நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்.

  ஞானம்: ரீட்டா, சாப்பாட்டு மேசையைத் தயார் செய். உணவையெல்லாம் எடுத்து வைப்போம்.

  ரீட்டா: சரிம்மா…

  இருவரும் உணவு வ
கைகளைக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைக்கத் தொடங்குகின்றனர்.

  காட்சி: 5

  [பின்னோட்டத் தொடர்ச்சி]

  டேவிட், ஜப்பானியர்கள் சிலருடன் ஜீப் வண்டியில் வந்து, அந்தோணியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.

  அந்தோணி: ம்… வண்டிச் சத்தம் கேட்டது… இப்பொது நம் வீட்டுக் கதவும் தட்டப்படுகிறதே!.. ரீட்டா, போய் யாரென்று பார்!...

  ரீட்டா கதவைத் திறக்காமல் சன்னலிலிருந்து பார்கிறாள். டேவிட், ஜப்பானியர்களுடன் வந்திருப்பதைக் கண்டதும் திடுக்கிடுகிறாள்.

  ரீட்டா: அப்பா… அந்த டேவிட்தான் ஜப்பானியர்களுடன் வந்திருக்கிறான்…

  அந்தோணி [பதற்றத்துடன்]: ஆ!.. டேவிட்டா?..

  கதவு மீண்டும் தட்டப்படுகிறது.

  ஞானம் [அஞ்சி]: ஐயோ!... இப்பொது என்ன செய்வது? நாம் அந்த வெள்ளைக்காரரை மறைத்து வைத்திருப்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது போலிருக்கிறது! நான் அப்போதே சொன்னேன்; கேட்டீர்களா?

  டேவிட் [வெளியிலிருந்து கத்துதல்]: கதவைத் திறக்கப்போகிறீர்களா இல்லையா?

 

‹ Prev